இன்றைய மாணவர்களின் இலக்கிய ஆர்வம்…ஓர் ஆசிரியரின் பார்வையில்

ஓர் இலக்கியம் என்பது அது உருவான நிலத்தின் வரலாற்றை பறைசாற்றும் ஆகப்பெரும் பொக்கிஷம். இலக்கியங்கள் மக்களுக்குத் தங்களைப் பற்றிய முன் அறிவை வளர்ப்பதோடு தன்னம்பிக்கையையும் ஊட்டும். இலக்கியத்தால் நாடுகள் கூட ஒன்றிணைந்திருக்கின்றன.

பாமரமக்கள் கூட தங்கள் வாழ்க்கையின் அங்கமாக இலக்கிய நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசுவர். இலக்கியங்கள் படைப்பவரை மட்டுமல்ல, படிப்பவரையும் பரவசப்படுத்தும். இத்துணை சிறப்புகளைக் கொண்ட இலக்கியங்களை இக்கால மாணவர்கள் எவ்வளவு ஆர்வம் செலுத்திக் கற்கின்றனர்?

Oplus_0

பெரும்பாலும் மதிப்பெண்களைத் தரும் வரிகளாகவே இன்றைய செய்யுள் பகுதிகள் பார்க்கப்படுகின்றன. புத்தகப்புழுக்களாய் திகழும் பல மாணவர்களுக்கு இலக்கிய உலகம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு இலக்கண நுணுக்கங்கள் அடங்கிய இலக்கியங்களைப் புரிந்து படிக்கும் பொறுமையில்லை இக்கால மாணவர்களுக்கு! அவர்கள் மீது குற்றம் சொல்லி பயனில்லை. அவர்களைத் தாங்கள் நினைத்த மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் தங்கள் சேமிப்பு உண்டியல்களாக பெற்றோர் கருதுவதால்தான் இந்த நிலைமை.

15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மாணவ சமுதாயத்தினரின் கற்றல் பொழுதுபோக்கு புத்தகங்களாய் இருந்ததால், அவர்களால் பல இலக்கியங்களையும் அறிய முடிந்தது. இன்றைய மாணவர்கள் எதுவும் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்ற மனநிலையில் வளர்வதாலோ என்னவோ, இலக்கியங்களின் இனிமையை அனுபவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

ஓர் இலக்கியத்தில் உள்ள சிறுபகுதியைப் பாடப்பகுதியாய் கொண்ட நம் பாடநூல்களை தயாரித்த குழுவினர் அந்தந்த வயதினருக்கேற்ற இலக்கியத்திலிருந்து அவர்கள் திறனுக்கேற்ற செய்யுள் பகுதியை தேடி அச்சேற்றுகின்றனர். இதனை மாணவர்களுக்கு கொண்டு செல்லும் அரிய பொறுப்பினை ஏற்றுள்ள ஆசிரிய பெருமக்கள் அந்த இலக்கியத்தின் முழுமையும் இரத்தினச் சுருக்கமாக மாணவர்களுக்குக் கூறுகின்றனர். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இலக்கியம் எனும் பழரசத்தை அதன் சுவை சொட்ட சொட்ட நாம் பருகும் வாய்ப்பு அதனை அனுபவித்துக் கற்றவர்கள் மூலமே கிடைக்கும்.

இலக்கியத்தின் நயம் குன்றாமல் பாடலாகவோ, கதையாகவோ, நாடகமாகவோ திறம்பட மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஆசிரியர் மூலமாக இலக்கியத்தினை 70mm திரைபோல் விரித்துக் காணமுடியும். அதனை இக்கால மாணவர்களால் முழுமையாக அனுபவிக்க முடிகிறதா என்றால், அனைவராலும் முடிவதில்லை. வெகுசிலரே அதனை அனுபவிக்கத் தெரிந்தவர்களாய் இருக்கின்றனர். இன்னும் சிலரோ நிகழ்கால நடைமுறைச் செய்திகளுடன் (trending news) ஒப்பிட்டுக் கற்பித்தால் மட்டுமே புரியும் வண்ணம் அறிவுவளர்ச்சி பெற்றுள்ளனர்.

இவற்றையெல்லாம் தாண்டி திறமையான ஆசிரியரின், சரியான வழிகாட்டுதலில் இலக்கியத்தேனை புசிக்கும் மாணவர்களும் உள்ளனர். அவர்களின் அறிவுப்பசிக்குத் தீனிபோடும் ஆசிரியர்களால் ஓர் இலக்கியம் இளம் சென்றடைகிறது. அவர்களின் வாசிப்பு திறனும், எண்ணங்களுக்கு எட்டாத அளவில் உயர்ந்துள்ளன. சமுதாயத்தை இலக்காக்கி கற்பனை வளமும் நம் எண்ணங்களுக்கு எட்டாத அளவில் உயர்ந்துள்ளன.

ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக்கண்காட்சியில் கோடிக்கணக்கில் புத்தகம் விற்பனையாவது இலக்கிய உலகில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்பதையேக் காட்டுகிறது.

ஆசிரியரின் உதவியுடனே மட்டும் கற்கும் காலம் போய், தற்போது பல் ஊடக தொழில்நுட்பம் மூலமாக ஒளி வடிவமாகவும்,ஒலி வடிவமாகவும், இசை வடிவமாகவும் இலக்கியங்கள் மிக எளிமையாய் இக்கால மாணவர்களின் கைகளில் தவழ்கிறது.

தங்கள் அன்பையும், நட்பையும், சினத்தையும், மன ஓட்டத்தையும் வெளிக்காட்ட இலக்கியக்காதல் கொண்ட இன்றைய தலைமுறையின் தன்னிகரற்ற வளர்ச்சியையும் ஒருபுறம் பார்க்க முடிகிறது.

பாரதி, ஔவை, வள்ளுவரின் படங்கள் மட்டுமல்லாது அவர்களின் வைரவரிகளும் இன்று பல நிறுவனச்சின்னங்களாகவும், சுவர் ஓவியங்களாகவும், ஏன் தங்கள் சட்டைகளைக் கூட அலங்கரிக்கும் அளவுக்கு அவர்களின் இலக்கியக்காதல் வளர்ந்துள்ளது பெருமையே!

இலக்கியங்கள் வெறும் மதிப்பெண்களாய் அல்லாமல் நம் மண்ணின் பெருமையாய் பார்க்கும் பல மாணவர்களால் இன்னும் பல நூற்றாண்டுகளைத் தாண்டியும் உலக இலக்கிய அரங்கில் நம் இலக்கியங்கள் கொடிக்கட்டிப் பறக்கும் என்பதில் ஐயமில்லை.

Shanmuga Priya T

Coordinator

KK Nagar Matric